Sunday, August 31, 2008

கேளுங்கள் வேகுஜனமே...

மக்கள் பணி ?

எரிகின்ற தீயிலே எண்ணெய் ஊற்றப் போய்
கருகிவிட்ட கையினை கொண்ட கயவர்களை
கேட்பீர் வேகுஜனமே - இது தானா நீவிர் செய்யும் மக்கள் பணி ?

மம்தாவும் புத்தாவும் ரத்தினரின் வழி மறிக்க
ரத்தினரும் உத்திரத்தில் உந்தியை கொண்டு விட,
வங்காள பாட்டாளி வயிற்றுக்கு என்ன வழி-
கேட்பீர் வேகுஜனமே - இது தானா நீவிர் செய்யும் மக்கள் பணி ?

கேட்கின்றோம் தாத்தாவே, தமிழ் தொண்டின் நிறம் அறிய,
வசை பாடவும் வழி உண்டெனில், - கற்போம் தமிழ் இதற்கெனவே.
கேட்பீர் வேகுஜனமே -இது தானா நீவிர் செய்யும் மக்கள் பணி

கேள்வி கேட்கும் மானிடரே, கேட்டுவிட்டால் போதுமா.?
கேட்கின்ற வேகுஜனமே.. விடயதிங்கு நம் கையில்...
பெற்று விட்ட சுதந்திரத்தை, கொடி பறக்க விட்டு விட்டோம்;
விட்டு விட்ட ஒட்டுதலை ஒட்டவைத்து பங்கெடுக்க
இளைய சிங்க இளைஞர்களும் இணைந்து ஒரு முடிவெடுத்தால்..
கேளுங்கள் வேகுஜனமே, விடயதிங்கு நம் கையில்

-கார்த்திக் அய்யர்.








Monday, October 09, 2006

தேர்தலிசை...

நிஜமும் இசையும்...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...
டீவி எதற்காக கொடுத்தான்...
உதவிடவா கொடுத்தான்..இல்லை..
தேர்தல் நினைத்துக் கொடுத்தான்...
உதவிடவா கொடுத்தான்..இல்லை..
தேர்தல் நினைத்துக் கொடுத்தான்...

கூட்டணியில் கொடுத்த இடம்,
குறைவு என்று மீண்டும் கேட்டான்...
கேட்ட இடம் கிடைக்க வில்லை...
கூட்டணியை மாற்றி விட்டான்...

உனக்காகவென்றோ.. எனக்காகவென்றோ..
ஒரு போதும், (அரசியல்) தலைவன் இருந்ததில்லை... (கொடுதத..)

மதுரையிலே தேர்தலப்பா..கட்சிகளின் பிரச்சார இறைச்சலப்பா...
அனைவருமே பணம் கொடுக்க..அடிதடி தான் நடக்குதப்பா...

உனக்காகவென்றோ.. எனக்காகவென்றோ..
ஜெயிப்பவன் ஒன்றும் செய்யப் போவதில்லை.. (கொடுதத..)

********** ******* ************** *********
பொய் சொல்லப் போறேன் , பொய் சொல்லப் போறேன்
கூட்டணியில் நிலைப்பேனடி...
பொய் சொல்லப் போறேன் , பொய் சொல்லப் போறேன்
மக்கள் நம்ம பக்கமடி.. ( பொய் )


சிக்குன் குனியா வந்து பல மக்கள் இங்கே இறந்ததார் என்று சொல்வதை நம்பாதடி...
இரண்டு ஏக்கர் நிலமதை எல்லோருக்கும் கொடுப்பேன்..என்னை நம்பி ஓட்டுப் போடடி. (சிக்குன்)

ஜாதிய அரசியல ...
நம்பி நான் கூட்டணி வைத்ததில்லை...
தேர்தல் முடிந்த பின்னே..
நான் யாரையும் ஒதுக்கவில்லை...
ஜெயித்த பின்னே தொகுதிப் பக்கம்
தினமும் வராமல் இருப்பதில்லை....(என்று..)

பொய் சொல்லப் போறேன் , பொய் சொல்லப் போறேன்
கூட்டணியில் நிலைப்பேனடி...
பொய் சொல்லப் போறேன் , பொய் சொல்லப் போறேன்
என்னை நம்பி ஓட்டுப் போடடி..

************************************************************

Sunday, June 25, 2006

படிக்கலாமா...

ரொம்ப நாட்களாக ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வருகிறேன். எழுத வேண்டும் என்றால் படிக்கவும் வேண்டும் அல்லவா... ?
படிக்க வேண்டிய புத்தகங்கள் ஏராளம் என்னிடம் உள்ளன. அவையெல்லாம் கடமைக்காக. அப்பாவின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து பணம் கட்டிய பட்ட மேற்ப்படிப்புக்காக, வந்த புத்தகங்கள். சில புத்தகங்களை இன்னமும் திறக்கக் கூட இல்லை.
கல்லூரி காலத்தே, கவிஞனாகவும், கலையார்வம் நிரம்பியும் கலகலவென நண்பர்கள் சூழவும் இருந்து களித்த நினைவு வந்தது. அவ்வப்போது எழுதி வந்த கவிதைகளை, ப்ரசுரிக்க எந்த பத்திரிக்கையும் விரும்பாது என்ற நம்பிக்கையால் , எப்போதும் பத்திரிக்கைக்கு எதையும் அனுப்பி வைத்தது இல்லை... சந்தா உட்பட !!..
அவ்வப்போது நூலகங்களில் படிப்பதோடு சரி..படிக்க சில இடங்கள் சில நேரங்களில் செளகரியமானவை. பொழுது போக்க வேண்டி நூலகம் சென்று , வருகிற அத்தனை பத்திரிக்கையையும் படித்துமுடித்து விட்டு பின்பு மீண்டும் நேரம் மிச்சமிருக்க அருகிலிருக்கிற தேனீர் கடையில் சுடசுட எண்ணை வாசமடிக்கும் பஜ்ஜியை உப்பும் உரைப்பும் சற்று தூக்கலாக இருக்கும் தேங்காய் (வெள்ளையாய் இருப்பதனால் !!) சட்னியில் நனைத்து கடித்து சுவைத்து, “விபச்சார அழகிகள் கைது” , “நூதன முறையில் திருட்டு”, என்பன போன்ற செய்திகளையும், சிந்துபாத் படக்கதையையும் படித்து விட்டு அருகிலிருக்கின்ற புத்தகக் கடையில் தொங்கும் புதிய புத்தகஙளின் வண்ண வண்ண அட்டைகளைப் பார்த்து, பெரிய எழுத்துக்களுடன் தொங்கும் செய்தித் தாளின் சுருக்கத்தினையும் படிக்கும் நேரத்தில், வீடு செல்ல வேன்டிய பேருந்து வந்து, அதில் ஏறி அமர்ந்தால், நடத்துனர் கொடுத்த பயணச் சீட்டினில் அச்சிடப்பட்டிருக்கின்ற எழுத்துக்களைப் படித்து முடித்தால் அருகில் வந்து அமரும் கிராமத்தில் அரசியல் பேச ஞானம் பெற, வெளி வருகிற அரசியல் பத்திரிக்கைகளில் பாதியை அள்ளி வந்திருக்கின்ற அன்பரிடமிருந்து இரு புத்தகங்களை இரவல் வாங்கி படித்து முடிக்க, இறங்க வேன்டிய இடம் வர நன்றி சொல்லி, பல உலக விஷயங்களைப் படித்து முடித்த மன நிறைவுடன் வீடு வந்து சேரும் பொழுது.....
புத்தக அலமாரியில் இருக்கின்ற படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள் ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கும்...
நமக்கு நேரம் இருந்தால் தானே !!! மாலை செய்தி படிக்க நேரமாகி விட்டிருக்கும்...

Thursday, June 15, 2006

இரு கோடுகள்

இது பாலசந்தர் படம் அல்ல,...நடைமுறைத் தத்துவம்..

இப்போதய மத்திய அரசில், அக்பர் அவையில் இருந்த பீர்பால் போன்ற மதி நுட்பம் மிகுந்த,
மந்திரிகள் இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசு ஒரு புறம் அறிவித்துக் கொண்டு இருக்கிறது.. மறு புறம், இடதுசாரி கட்சிகள் தத்தமது மாநிலங்களிலும், டெல்லியிலும் விலை உயர்வை கண்டித்து, போராட்டம் நடத்துகின்றன. காங்கிரஸ் ஆளும், மாநிலங்களிலோ, விற்பனை வரியை கட்டுப்படுத்தி, ஒரு ரூபாய் வரை பெட்ரோல் பொருட்கள் விலை குறைக்கப் பட்டுள்ளது..

கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பத்து தினங்களுக்கு முன்பு வரை, பரபரப்பாக பேசப்பட்ட, போராடப்பட்ட, இட ஒதுகீட்டுப் பிரச்சனை, இப்போது, எல்லோராலும், மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட ,விஷயம் ஆகி விட்டது..

இப்போது பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனயை சமாளிக்க, இன்னொரு பெரிய கோடு போடத் தெரியாதா என்ன, நம் ஆட்சியாளர்களுக்கு ?

வாழ்க ஜனனாயகம் !!

Saturday, May 27, 2006

யாருக்கு வேண்டும் இட ஒதுக்கீடு ?

திருத்தணி அருகே அமீர்பேட்டை கிராமத்தில் மண் பானை தயாரிக்கும் குடும்பத்தை சேர்ந்த சுசித்ரா, பிளஸ் 2 தேர்வில் 1071 மதிப்பெண்கள் பெற்று அரசு மேல் நிலைப்பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ்ந்த போதும், வசதியின்மை காரணமாக, மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாமல் மண் பானை செய்யப் போகின்றார்...

இட ஒதுக்கீடு மட்டுமின்றி, இலவச கல்வியும் இப்படிப் பட்ட பிற்பட்டவர்களுக்கு கொடுக்கப் பட வேன்டும் ; அதல்லாம்மல், ஜாதீய அடிப்படையில் செய்யப்படும் இட ஒதுக்கீடு, எக்காலத்தும், இப்படிப்பட்ட தகுதியுள்ள , வசதியற்ற, மாணாக்கர்களுக்கு உதவப் போவது இல்லை.

ஒரு சீன பழமொழி ஒன்று உள்ளது... பசி என்று வருபவனுக்கு, மீனை கொடுக்காதே, மீன் பிடிக்க கற்றுக்கொடு.. நமது அரசாங்கமும், அரசியல்வாதிகளும், மீன் பிடிக்கக் கற்றுக்கொண்டு விட்டு, மக்களுக்கு , மீனை கொடுத்து ஏய்க்கின்றார்கள்..

" ஜாதிகள் இல்லையடி பாப்பா,
குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்,
நீதி உயர்ந்த மதி கல்வி,...."

அதை அனைவருக்கும் தருதல் அரசின் கடமையன்றோ...

இன்று ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் கொடுக்கும் போலி வாக்குறுதிகளையும், குறுகிய கால நன்மையான, பதவியில் நிலைக்க வேண்டி, செய்யும், பிரிவினைகளையும், பொது மக்களாகிய நாம் நம்பாமல், பொதுவில் நினைத்து வழிச் செல்ல வேண்டும்.

இந்தி ஒழிப்பு, சுயாட்சி, என்று குமுறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, "ரெண்டு ரூபாயிக்கு ஒரு கிலோ அரிசி" என்றும், "வீட்டுக்கு ஒரு கலர் டீவீ " என்றும், சமயத்திற்க்கு தகுந்த மாதிரி, கூட்டணி மாற்றிக்கொண்டும், செய்யும் மலிவான வியாபார உத்திகள் தான் அரசியல் தந்திரம் என்று மக்கள் உணர வேண்டும்.

இந்தி ஒழிந்ததா, சுயாட்சி வந்ததா என்றால், இல்லை.. இவர்களின் கொள்கைகளை உண்மையாக நம்பி, அதன் வழி நடந்து, ஒரு குறுகிய வட்டத்துக்குள், வளர வழியின்றி, இருக்கும் அப்பாவி வாக்காளன் தான், உண்மையில் பின் தங்கிய (தங்கிப் போன) வகுப்பினன்.

இப்படி பிரிவினைகளை பலவிதமாக, வகுத்துவிட்டு, பின்பு, "சமத்துவம்", "சமத்துவபுரம்" என்றெல்லாம் பேசி வருவது வெறும் ஏமாத்து வேலையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்..

சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு உண்மையாக இந்த உதவி போய்ச் சேருகிறதா என்றால் இல்லை..வசதி நிறைந்த, பிறந்த ஜாதியின் காரணத்தினால் மட்டுமே " பின் தங்கிப் போன" பலர் இதனை மேற் படிப்பினுக்கு செல்லும், ஒரு எளிய வழியாக பார்க்கின்றார்கள்..கடின உழைப்பை கை விட்டு, ஒதுகீட்டினை மனதில் கொண்டு அதற்கேற்ற மாதிரி, மதிப்பெண்கள் பெறுகின்றார்கள்,.

ஒரு சோம்பேறி தலைமுறையை உருவாக்குகின்ற பெருமை, நமது அரசியல் வதிகளுக்கு போய்ச் சேரட்டும்..மதவாத அமைப்புக்களை, அரசியல் அமைப்புக்களாக மாற்றிய பெருமை இவர்களுக்கு போய்ச் சேரட்டும்..

படித்த இளைஞர்கள் பெரும் விவரம் அறியாத, எளிய, கிராமத்து மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்..அவர்களுடய அறியாமை, அவர்களுக்கு மட்டுமின்றி, யாருக்குமே நன்மையைத் தரப் போவது இல்லை...

Saturday, May 13, 2006

ஒரு சின்ன கேள்வி..

முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அதே மேடையில் 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம், கூட்டுறவு கடன் ரத்து, சத்துணவில் 2 முட்டை ஆகிய உத்தரவுகளில் கருணாநிதி கையெழுத்திட்டார்.

தேர்தல் பிரசாரத்தின்போது, "முதல்வராகப் பொறுப்பேற்றதும் என் முதல் கையெழுத்து ரூ.2க்கு ரேஷன் அரிசி வழங்கும் திட்டத்திற்கு தான்' என்று அறிவித்திருந்ததற்கு நேற்று செயல் வடிவம் கொடுத்தார்.

நன்று, வாழ்த்துக்கள். keep it up..

ஒரு சின்ன கேள்வி..

" ..... இந்த உத்தரவால் அரசுக்கு ஆறாயிரத்து 866 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதை அரசே ஏற்கும்....."
இவ்வாறு அறிவித்துவிட்டு முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார்.


"அரசே ஏற்கும்" என்றால் அது வேறு எந்த வகையிலும் மக்கள் தலையில் விழாது என்று உறுதி அளிப்பாரா முதல்வர்?


Wednesday, February 22, 2006

இந்த நாள் இனிய நாள்!

என் காதோரம் நரைச்சிருச்சு
கடமை ஒன்னும் தெரிஞ்ஞிருச்சு
தமிழில் இணையத்தில் எழுதும்
வழி ஒன்னும் புரிஞ்ஞிருச்சு....

நானாகத் தேடித் தேடி
வெகுவாக முயற்சி செய்தேன்
தானாக வரும் வரையில்
எனக்கு அது கிடைக்க வில்ல.

ராமனார் வில் வளைக்க
இத்தனை நாள் ஆக வில்ல
கம்பர் அதை கவி பாட
இத்தனை நாள் பிடிக்க வில்ல

எத்தனை நாள் ஆனாலும்
விரும்பியது கிடச்சதனால்
என் வரையில் நான் சொல்வேன்
இந்த நாள் இனிய நாள்